Monday, February 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 64

தினம் ஒரு பாசுரம் - 64

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 


சென்று சேர் திருவேங்கட மா மலை 


ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே


-திருவாய்மொழி (நம்மாழ்வார்)


பொருள்:

குன்றம் ஏந்திக் - கோவர்த்தன மலையை (தனது ஒரு விரலால் உயர்த்திப் பிடித்து
குளிர் மழை காத்தவன் - (ஆயர் குல மக்களை) குளிர்ந்த பெருமழையிலிருந்து  காத்தவனும்
அன்று - முன்னொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் - (தனது திருவடிகளால்) உலகங்களை அளந்த நம் தலைவனும்
பரன் - (அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும்) எம்பெருமானும்
சென்று சேர் - சென்று தங்கி (அருள் பாலிக்கும்)
திருவேங்கட மா மலை ஒன்றுமே -  திருமலை ஒன்றை மட்டுமே
தொழ  - (போற்றி) தொழுதோமேயானால் 
நம் வினை ஓயுமே - நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே 
பாசுரக்குறிப்புகள்: 

நம்மாழ்வாருக்கு (ஏன் எல்லா ஆழ்வார்களுக்கும்) உகந்த கிருஷ்ண மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்கள் பாசுரத்தில் சுட்டப்படுகின்றன. அவற்றின்  பெருமை வாயிலாக,  கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் பெருமாள் திருவேங்கடமுடையானாக எழுந்தருளியுள்ள திருமலை திவ்விய தேசத்தின் மேன்மையை ஆழ்வார் பாசுரத்தில் போற்றுகிறார்.  கலியுகத்தில் "போற்றப் பறை தரும் புண்ணியன்" ஆனவன் அர்ச்சாவதாரா ரூபத்தில் அருளும் புண்ணியத் தலங்களில் தலையான மூன்றில் ஒன்று திருமலை. மற்றவை அவன் பள்ளி கொண்ட திருவரங்கமும், திருமந்திரம் அருளிய பத்ரிகாசிரமும் ஆகும்.


 கலியுகத்தில் திருவேங்கடமுடையான் ஒருவனைப் பற்றினாலே போதுமானது என்று அடியவர் நமக்கு ஆழ்வார் அறுதியிட்டுக் கூறுகிறார்.  நம் தீவினைகள் அனைத்தையும் அழித்து நம்மை தடுத்தாட்கொள்ள வல்லான் அவன் ஒருவனே என்கிறார்.


சுட்டப்பட்ட 2 அவதாரச் செயல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். தமது வலிமையால் அகந்தை கொண்டவர்கள் (இந்திரன், மாவலிச் சக்கரவர்த்தி) தவறை உணர்ந்து அப்பரமனைச்  சரண் புகுந்த செய்தி இரண்டிலும் வெளிப்படுகிறது அல்லவா?

கிருஷ்ண அனுபவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தால் அது நம்மாழ்வார் என்னும் அளவு, கிருஷ்ண பக்திப் பேருவகையில் திளைத்து நமக்கு திராவிட வேதம் அருளியவர், வைணவத்தின் ஆதி குருவான, திருக்குருகைப் பிரான்!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் - ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்து, அவனுக்குப் பல்வகையான  உணவுகளைப் படைப்பது வழக்கம். ஒரு சமயம் கண்ணபிரான், சூரியனும், வருணனும், கோவர்த்தன மலையும் சேர்ந்தே நமக்கு எரிக்க விறகும், உண்பதற்கு காய்கனிகளும், பசுக்களுக்குப் புல்லும் தருகையில், இந்திரனுக்கு விழா எதற்கு என்று ஆயர்களைத் தடுத்து விட்டான்.

அகந்தையின் காரணமாக கடுஞ்சீற்றம் கொண்ட இந்திரன், புயல் காற்றையும், பெருமழையையும் உண்டாக்கி (கண்ணனின் அன்புக்குரிய) ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்தான். அப்போதும் அந்த மாயக்கண்ணன் இந்திரன் மேல்  கோபப்படவில்லை. குழந்தையிடமிருந்து ஒன்றைப் பிடுங்கிக் கொண்டால் அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் என்பதை அறியாதவனா அந்தப் பரந்தாமன் :-) ஆனால், இந்திரனின்  அகந்தை அழிய  வேண்டும் , அவனுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காகவே கண்ணனின்  "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த" விளையாட்டு!

சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள். இதை இன்னொரு விதமாக பொருள் கொள்வதிலும் நயம் உள்ளது. அதாவது அடியவரான நாம் சென்று சேர வேண்டிய இடம் அந்த திருவேங்கட மாமலையே என்றும் கொள்ளலாம்.  அங்கு சென்றால் போதும் அல்லது சேர்ந்தால் போதுமே! எதற்கு "சென்று சேர" வேண்டும்? செல்லுதல் என்பது உடல் சார்ந்தது, சேர்தல் என்பது நம் மனம் (ஆன்மா) சார்ந்தது. அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால்  தான், இறைவனைப் பற்ற இயலும், உய்வுக்கான பாதையில் பயணிக்க முடியும்.  அதாவது மெய்/ஆத்ம சுத்தி என இரண்டும் தேவை.

உய்வு (பரமபதம்/மோட்சம்) என்பது அழிவில்லா ஆன்மாவுக்குத் தானே! உடலுக்குத் தொடர்பு இல்லையே, என்று நமக்குத் தோன்றும். இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் வாழ்க்கையும்

மேலே சொன்னதை நம்மாழ்வார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் ஒப்பு நோக்கினால் "சென்று சேர்" என்பதின் சாராம்சத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில்  சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா

எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (முக்தி ) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம்.

--- எ.அ.பாலா

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test

maithriim said...

அருமையான விளக்கம்!
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
என்று ஆண்டாளும் இதே மாதிரி திருப்பாவையில் பாடியுள்ளாள். பகவான் மேல் அதே பரிவு, அதே போற்றுதல்!

amas32

pvr said...

அற்புதம். 'சென்று சேர' என்னும் எளிய வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் பொருளை இனிமையாக விளக்கியிருக்கிறீர்கள். அருமை.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails